×

புதிதாக வாங்கப்படும் அரசு பேருந்துகளுக்கு மஞ்சள் நிற பெயின்ட்: போக்குவரத்து அதிகாரிகள் தகவல்

சென்னை: போக்குவரத்து கழகங்களில் புதிதாக வாங்கப்படும் அரசு பேருந்துகள் மஞ்சள் நிற வண்ணம் தீட்டப்பட்டு நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகம் 8 கோட்டங்களில் பேருந்துகளை இயக்கி வருகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் நீண்ட தூர பேருந்துகளை இயக்கி வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் நீல நிறங்களிலும், சிவப்பு நிறங்களிலும் இயங்கி வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் பச்சை நிறத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன் பின், பி.எஸ்., 4 ரக பேருந்து வருகையால், நீல நிறம் மாற்றப்பட்டது. தற்போது, அதிகளவில் நீல நிற பேருந்துகள் இயக்கத்தில் உள்ளன. இலவச பேருந்து என அடையாளம் காண முன், பின் பாதி, பிங்க் நிறத்தில் டவுன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுதும் பயன்படுத்த 1,000 புதிய பேருந்துகளை வாங்கவும், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும், ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 8 கோட்டங்களில் சேதமடைந்த பேருந்துகள் சீரமைக்கப்பட உள்ளன. அதன் ஒரு பகுதியாக, பழைய வண்ணம் மாற்றப்பட்டு, மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு பேருந்துகள் மாற்றப்பட உள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசு போக்குவரத்து கழகம் பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்கும் நோக்கத்தில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது ஆயிரம் புதிய பேருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான டெண்டர் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இருக்கைகள், ஜன்னல்கள் மற்றும் கம்பிகள் ஆகியவை சேதமடைந்த பழைய பேருந்துகளை சரி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தற்போது சீரமைக்கப்பட்டு வரும் பேருந்துகளில் பழைய வண்ணம் மாற்றம் செய்யப்பட்டு புதிய நிறம் அளிக்கப்பட உள்ளது. ஏற்கனவே போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கி வரும் பேருந்துகளில் நீலம், பச்சை மற்றும் பிங்க் உள்ளிட்ட நிறங்கள் அடிக்கப்பட்டுள்ள நிலையில் அதனால் சீரமைக்கப்படும் பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டு வருகிறது. எனவே இனி தமிழகத்தில் அரசு பேருந்துகள் மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட உள்ளது. நிறம் மட்டுமின்றி, பேருந்துகளின் இருக்கை, அமரும் வசதி போன்றவை விரிவாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பெரிய அளவிலான டிஜிட்டல் பலகைகள், சிசிடிவி உள்ளிட்ட நவீன வசதிகளும் இருக்கும். விரைவில் இயக்கத்துக்கு வரும் பேருந்துகளுக்கு மஞ்சள் நிற பெயின்ட் அடிக்கப்பட்டு வருகிறது. சென்னை, பெங்களூரு, திருச்சி, கரூரில் புதிய பேருந்துகள் தயாராகி வருகின்றன.

The post புதிதாக வாங்கப்படும் அரசு பேருந்துகளுக்கு மஞ்சள் நிற பெயின்ட்: போக்குவரத்து அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...